மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்த ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தின் கீழ் 1.43 லட்சம் குடும்பத்தினர் என மொத்தமாக 2 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 575 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு சுகாதாரத்துறை மூலமாக ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 11 மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒன்பது ஆண்டுகளாக அனுமதி அளித்து வருகிறது.
இந்த ஆண்டில் பதினொரு செவிலியர் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க அனுமதி வழங்கப்பட்டது.
கரோனா காலத்தில் நடக்காமல் போன இந்த திட்டமானது ஜப்பான் ஜைக்கா குழுமத்தின் கடன் உதவியுடன் நடைமுறையில் வர இருக்கிறது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.1,977 கோடியாக அதிகரித்துள்ளது. வருகிற ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமை அடைய இருக்கிறது என்று கூறினார்.