அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!! 53 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் !!
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள 53 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். ரயில்களின் செயல்திறனும் மேம்படுத்தப்படும். இதில் சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித்தடங்களும் அடங்கும்.
130 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கான ரயிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து சென்னை-மதுரை ரயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. மேலும் அரக்கோணம்-மைசூர், ஜோலார்பேட்டை-பெங்களுரு, பெங்களுரு-மைசூர், கண்ணூர்-கோழிக்கோடு, திருவனந்தபுரம்-மதுரை, ஜோலார்பேட்டை, கோவை போன்ற வழித்தடங்களிலும் ரயில்களின் வேகம் 130 கி.மீ. அதிகரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை-பெங்களுரு-மைசூர் வந்தே பாரத் ரயில் சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜோலார்பேட்டை-பெங்களுரு மற்றும் பெங்களுரு-மைசூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் மேலும் குறையும்.
தெற்கு ரயில்வேயில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 5081 கி.மீ. தூரத்திற்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இதில் 2037 கி.மீட்டருக்கான பணிகள் முடிவடைந்துள்ளது.