8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!!
நாம் வாக்களித்த அடையாளத்திற்காக நம் விரல்களில் அழிக்க முடியாத மை ஒன்றை வைப்பார்கள். ஏனெனில் ஒருமுறை வாக்களித்த நபரே மீண்டும் வந்து வாக்களிக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற அழியாத மை வாக்காளர்களின் விரல்களில் வைப்பது வழக்கம். அந்த மை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நம் விரல்களில் இருந்து அழிந்துவிடும்.
ஆனால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 8 ஆண்டுகளாக இந்த மை அழியவே இல்லையாம். அதனால் அவர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார். கேரள மாநிலம் சோரனூரை சார்ந்த குருவாயூரப்பன் நகரில் வசிக்கும் உஷா (62) என்ற பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு கேரள மாநில சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளார்.
அப்போது அடையாளத்திற்காக அவர் விரலில் மை வைத்துள்ளனர். ஆனால் அந்த மை இன்று வரை அழியவில்லையாம். இதனால் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் அவரால் வாக்களிக்க முடியவில்லை. அவரும் அந்த மையை அழிக்க என்னென்னவோ செய்து பார்த்தும் அந்த மையை அழிக்க முடியவிலையாம்.
இதன் காரணமாக நேற்று நடைபெற்ற தேர்தலிலும் உஷாவால் வாக்களிக்க முடியவில்லை. இதுகுறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும் தேர்தல் ஆணையம் சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலின்போது வைக்கப்பட்ட மை அழியாததால் ஒரு பெண் 9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.