பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

Photo of author

By Parthipan K

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை குவித்து இந்திய அணி பதக்க பட்டியலில் 24 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதனையடுத்து பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பேட்மிண்டனில் மட்டும் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களை வென்றிருக்கிறது.

இதனிடையே தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் தருண் தோல்வியை தழுவினார். பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி இணை ஆடிய வெண்கல பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியே ஏற்பட்டது. ஆனால், இவர்கள் இருவரும் போராடிய விதம் ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருந்தது

இந்நிலையில் தற்போது டோக்கியோ பாராஒலிம்பிக்கில் போட்டிகள் முடிவடைந்துள்ளன. நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து உள்ளனர். 1968 முதல் 2016 வரை பாராஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தநிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெக்காராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.