ஒரே ஒரு தவறால் குறைந்த ஸ்கோர்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு !
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சேர்த்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஆரம்பம் முதலே வானவேடிக்கைக் காட்டினார். 6 ஆவது ஓவரில் 27 ரன்கள் சேர்த்த அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதனால் ரன்ரேட் 10 க்கும் மேல் செல்ல இந்தியா 200 ரன்களைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் அவுட் ஆக வழக்கமாக வரும் கோலிக்குப் பதிலாக ஷிவம் துபே மூன்றாவது வீரராக களமிறங்கினார். அதுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அவர் ரன்கள் சேர்க்க முடியாமல் பந்துகளை சாப்பிட மறுமுனையில் அதிரடியாக விளையாட முயன்ற ரோஹித் ஷர்மா எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். அதன் பின் அதே ஓவரில் துபேவும் அவுட் ஆக இந்திய அணிக்கு சரிவு ஏற்பட்டது.
அதன் பின் இந்திய அணி நிலை பெற சில ஓவர்கள் ஆனது. அதன் பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கோலி 38 ரன்களில் அவுட் ஆக கடைசி நேர அதிரடியால் இந்தியா 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 190 என்றிருக்க 179 ரன்களை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.