தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்:வெற்றி வாகை சூடிய U-19 அணி !
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற கால் இறுதி சூப்பர் லீக் போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி 50 ஓவர்களில் 233 ரன்களை சேர்த்தது. அதிக பட்சமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்வால் 62 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து 234 என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை தொடக்கம் முதலே இந்திய பவுலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
கார்த்திக் தியாகி வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை இந்திய அணி சாய்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி ஆமை வேகத்தில் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது. நடுவரிசை ஆட்டக்காரர்களான பேட்ரிக்-21 மற்றும் ஸ்காட்-35 ஆகியோர் சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும் அவர்களால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியவில்லை. இதனால் ஆஸி 159 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 43.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் கார்த்திக் தியாகி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி வரிசையாக வெற்றி வாகை சூடி வருவது போல 19 வயதுக்குட்பட்ட அணியும் இந்த தொடரில் வரிசையாக வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.