இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடி… பயம் காட்டிய டேவிட் மில்லர்… இந்தியா சாதனை வெற்றி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். 10 ஆவது ஓவரில் 96 ரன்கள் இருக்கும் போது இந்த கூட்டணி பிரிந்தது. அதன் பின்னர் கே எல் ராகுலுடன் சேர்ந்து விளையாடினார்.
கே எல் ராகுல் அரைசதம் அடித்து வெளியேற அதன் பின்னர் சூர்யகுமார்- கோலி கூட்டணி அதிரடியில் இறங்கினர். இவர்கள் இருவரும் இணைந்து 42 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். 22 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். அதன் பின்னர் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் சேர்த்தது.
இந்த இமாலய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஆனாலும் மறுபக்கத்தின் தேவைப்படும் ரன்ரேட் விகிதம் அதிகமாகிக் கொண்டே சென்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 47 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து கலக்கினார். குயிண்டன் டி காக் 48 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியால் கடைசியில் 221 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியாவில் இந்திய அணி வென்றதில்லை. அதை முறியடித்து இந்த தொடரை வென்றுள்ளது.