தாலிபான்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! இந்திய ஆசிரியர் விளக்கம்!
தாலிபான் அமைப்பு சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.அந்த அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாகும்.உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் தாலிபான் அமைப்பு முக்கியமானது.ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான் அமைப்பு தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பல பொதுமக்களும் அதிகாரிகளும் அந்த நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர்.வெளிநாட்டு தூதரகங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை.இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் பல மக்கள் வேறு நாடுகளுக்கு செல்வதற்கு பரவலாகக் கூடியுள்ளனர்.நாட்டைவிட்டு வெளியேறும் மக்களை தாலிபான்கள் தடுக்கவில்லை.முன்னதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தமல் பட்டாச்சார்யா காபூலில் உள்ள கர்தான் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியராக ஐந்து மாதங்கள் பணியாற்றினார்.அவர் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.
அவர் ஆப்கானிஸ்தானில் தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி கூறுகிறார்.தாலிபான்கள் ஆகஸ்ட் 15க்கு முன்னரே விரைவாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.தாலிபான்கள் நாட்டை கைப்பற்றுவதற்கு முன் தானும் தன்னுடன் பணியாற்றும் இன்னொரு இந்தியரும் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்தனர் என்றும் மேலும் ஆகஸ்ட் 17 அன்று தாங்கள் இந்திய திரும்ப தயாரானதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களுக்கு விமான டிக்கெட் கிடைக்கததால் அன்று செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.தாலிபான்கள் தங்களை என்ன செய்யப் போகிறார்களோ என்று அச்சத்துடன் அவர்கள் இருந்தனர்.ஆனால் அவர்கள் தங்களை நன்கு பார்த்துக் கொண்டதாகவும் நேரத்திற்கு உணவு வழங்கியதாகவும் தண்ணீர் மற்றும் மருந்துகள் சரியாகக் கொடுத்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் அவர் இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கும் இந்திய விமானப் படைக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.