இந்தியாவின் லட்சிய கனவு இன்று விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!
சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தில் உள்ளது.
மேலும் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரத்தில் 3 முக்கிய பகுதிகள் உள்ளது. ராக்கெட்டில் உள்ள ‘புரபுல்சன்’ பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.
லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.பணிகள் முடிவடைந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் சீறிபாய இருக்கிறது.
நிலவுக்கு அனுப்பப்படும் 3-வது விண்கலமான சந்திரயான் விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தியாவின் லட்சிய பயணம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ள நிலையில் சந்திரயான் 2-வது தோல்வியை தழுவியதால் சந்திரயான்-3 க்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சந்திரயான் – 3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.