கருகும் தாமரை.. சடசடவென சரியும் விக்கெட்டுகள்.. அண்ணாமலை தான் காரணமா? கதிகலங்கும் பாஜகவினர்
சென்னை
தமிழக பாஜகவில் சலசலப்புகள் கூடி வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், சர்வாதிகார போக்குடன் அமைந்து வருவது, அக்கட்சியினருக்கு பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.
அதல பாதாளத்தில் தொங்கி கொண்டும், திராவிட மண்ணில் யாருக்குமே தெரியாமல் இருந்த பாஜக என்ற கட்சியை, தமிழக மக்களின் கவனத்துக் கொண்டு சென்றது தமிழிசை சவுந்தராஜான் என்பதை மறுக்க முடியாது, மறக்கவும் முடியாது.
இதற்கு காரணம், தலைமை மீதான அவரது விசுவாசமும், கண்ணியமான அணுகுமுறையும், நாகரீகமான வார்த்தை உதிர்த்தலும் என்பதையும் நாம் தயங்காமல் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
அண்ணாமலை அரசியல்
ஆனால், இந்த முறை எம்பி தேர்தலில், குறைந்தபட்சம் 10 சீட்டுக்களையாவது, வென்றெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் பாஜக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது. அமைதியான மற்றும் மென்மையான அரசியல் என்பதையும் தாண்டி, அதிரடி அரசியல் என்பதே பாஜகவுக்கு தற்சமய தேவையானதாக உள்ளது.
அந்தவகையில் இதற்கு ஏதுவாக எத்தனையோ மூத்த தலைவர்கள் தமிழக பாஜகவில் இருந்தாலும், அண்ணாமலையை தேடிக்கண்டுபிடித்து கொண்டு வந்தது பாஜக தலைமை. அதன் அடிப்படையில் பாஜக தலைவர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற உறுதியுடன் அண்ணாமலை களமிறங்கினார்.
திமுக எதிர்ப்பு
தமிழக அரசியலை தெளிவாக புரிந்து கொண்ட அவர் தங்களுக்கான எதிரியாக திமுகவை வரித்து கொண்டார். அதற்கேற்றவாறு, அதிமுக விவகாரமும் கை கொடுக்க, அதிமுகவின் தேய்மானத்தில் பாஜக நன்றாகவே வளர தொடங்கிவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் கட்சி சார்பற்ற வகையில் தமிழக இளைஞர்கள் பெரும்பாலோனோர் அண்ணாமலையை கவனிக்க ஆரம்பித்தனர்.
மூத்த தலைவர்கள் குமுறல்
ஆனால், அதேசமயம், சமீபகாலமாக அண்ணாமலையின் செயல்பாடுகள் சொந்த கட்சியினராலேயே விமர்சிக்கப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக மூத்த தலைவர்கள், அண்ணாமலையின் செயல்பாடுகளால், அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாகவே கூறப்படுகிறது.
குறிப்பாக அண்ணாமலையை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பாஜவில் போட்டியிட ஒருத்தர் கூட முன்வரமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சீனியர்களை மதிப்பது இல்லை, யாரிடமும் எந்த ஆலோசனையும் நடத்துவது கிடையாது, தான் சொல்வது மட்டுமே சரி என்று பேசி வருகிறார் என்றெல்லாம் பொருமல்கள் எழுந்தபடியே உள்ளன.
இதுவரை திமுக மீது அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றைகூட நிரூபித்தது கிடையாது. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வதந்திகளை பரப்பிக் கொண்டு இருப்பதால், அண்ணாமலை மீதான நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியிலும், அவரது கட்சியினர் மத்தியிலும் வெகுவாக குறைந்து வருவதையும் நினைத்து, சீனியர்கள் கவலை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை விளம்பரம்
மொத்தத்தில் தன்னை மட்டுமே சோஷியல் மீடியாவில் புரமோட் செய்துக்கொண்டு, மற்றவர்களை டம்மி செய்துவிட்ட வருத்தமும் நிறைய பேருக்கு உள்ளது. ஆனாலும், மோடி – அமித்ஷா இருவருக்கும் பிடித்தமான தலைவராகவும், நம்பகத்தன்மை மிக்கவராகவும் அண்ணாமலை திகழ்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகவே, கட்சிக்குள் அனைவரும் பொறுமை காப்பதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களாகவே, உட்கட்சி மோதல் வெடித்து கிளம்பி வருகிறது. சர்ச்சைகளிலும் பலர் சிக்கி வருகிறார்கள். மேலிடம் வரை போனை போட்டு பேசக்கூடிய அளவுக்கு பவர்புல் லீடர் என்று சொல்லப்பட்ட கேடி ராகவன் விவகாரம் முதலே இவருக்கு எதிரான இந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும் அதிகமாக வெளியே வர ஆரம்பித்துவிட்டன.
கேடி ராகவன் விவகாரத்தின் பின்னணியிலேயே அண்ணாமலை இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு, அந்த விவகாரமும் சரி, அதை விசாரிக்க அமைக்கப்பட்ட மலர்க்கொடி தலைமையிலான விசாரணையும் சரி என்ன ஆனது என்றே தெரியவில்லை.
கோவை மைதிலி வினோ விமர்சனம்
இதற்கு பிறகு, கோவை பாஜகவின் மகளிரணியில் இருந்து மைதிலி வினோ பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து திமுகவில் இணைந்தார். இத்தனைக்கும் 22 ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தவர் மைதிலி வினோ. பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலை உள்ளது என்று விமர்சித்திருந்தார்.
மேலும் தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் நாங்கள். ஆனால், மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்று ஒரு சாபத்தையும் மைதிலி போகிற போக்கில் விடுத்திருந்தார்.மைதிலி அதிருப்தியில் உள்ளார் என்று தெரிந்தும்கூட, தமிழக பாஜக அதை கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.
டெய்ஸி – திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம்
இதற்கு பிறகு டெய்ஸி – திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் வெடித்தது. இந்த ஆடியோ அண்ணாமலைக்கு கைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சென்றும் கூட அவர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, மீடியாவில் ஆடியோ வெளிவந்து விட்டதால் தான், அண்ணாமலை தலையிட நேர்ந்தது என்றும் சலசலக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு கருத்து சொல்ல வந்த, காயத்ரி ரகுராமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சூர்யா விவகாரத்துக்கு கமிட்டி அமைத்து விசாரிக்கப்படும் என்று சொன்ன அண்ணாமலை, காயத்ரி ரகுராம் விவகாரத்திற்கும் கமிட்டி போட்டு ஏன் விசாரிக்கவில்லை? என்ற கேள்வியும் சோஷியல் மீடியாவில் வெடித்தது.
சுதந்திரா தேவி வீடியோ
நேற்றைய தினம் கூட கமலாலயத்தில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து திருவாரூர் சுதந்திரா தேவி என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார். “கமலாலயத்தில் உள்ள ஊழியர்கள், நிர்வாகிகள் அவர்களுக்கு தேவைப்படும் பெண்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள்.
அண்ணாமலைக்கு தெரியாமல் ஒரு தனி சாம்ராஜ்யமே அங்கு நடக்கிறது. கமலாலயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை அண்ணாமலை கவனிக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு தான் பிரச்சினை” என்று அதில் எச்சரிக்கையும் செய்திருந்தார்.
முக்கிய நிர்வாகிகள் வெளியேற்றம்
ஆனால், குற்றச்சாட்டை கொண்டு வந்தவர்களை உடனே பதவியில் இருந்து தூக்கியடிக்கும் தமிழக பாஜக, சுதந்திரா தேவியையும் கட்சியை விட்டு நீக்கியது. இதோ இன்றைய தினம் திருச்சி சூர்யா, அண்ணாமலைக்கே அட்வைஸ் தந்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறும் நிலைமைக்கு ஆளாகி உள்ளார். உண்மையிலேயே தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?
இல.கணேசன், தமிழிசை போன்றோர் மாநில பாஜக தலைவர்களாக இருக்கும் போது, அந்த கட்சிக்கு மரியாதை இருந்தது. வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச். ராஜா போன்றோர் வளர்த்தெடுத்த கட்சி இது.
பாஜகவுக்குள் சலசலப்பு
இத்தனை சீனியர்கள் கட்சிக்குள் இருந்தும், ஏன் இவ்வளவு சலசலப்பு நடந்து வருகிறது? ஏன் ஒருவருமே நடக்கும் நிகழ்வுகளை தட்டிக் கேட்கவில்லை? ஏன் ஒருவருமே மாநில தலைமைக்கு அறிவுறுத்தவில்லை? என்ற கேள்விகள் பாஜக உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்து வருகிறது. தவறு என்று தெரிந்தால், அவைகளை கண்டிப்பதும், திருத்துவதும் மூத்த தலைவர்களின் தலையாய கடமையாகும்.
தலைமைப்பண்பு
“தலைமை பண்பு” என்பது அனைவரையும் அரவணைக்கக் கூடியது. பக்குவம் நிறைந்தது.. பொறுமை நிறைந்தது. தாம் எடுக்கும் முடிவுகள் தவறாகிறபோது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் நிறைந்தது என்பதை எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்கும் அண்ணாமலைக்கு எடுத்து சொல்வது யாரோ?!!
“ஒற்றை மனிதன்” என்ற இயல்பை குறைத்துக்கொண்டு, பொதுவுடைமையுடையவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு தலைவனுக்குரிய அடிப்படை பண்பு என்பதை எடுத்து சொல்வது யாரோ??