கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. இதில் முக்கிய அணியாக டெக்கான் சார்ஜர்ஸ் பங்கேற்று விளையாடி வந்தது. 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்று காட்டியது. பின்னர் நிதிநெருக்கடி காரணத்தால்
பிசிசிஐ-க்கு செலுத்த வேண்டிய 100 கோடி உத்தரவாத தொகையை செலுத்த முடியாமல் போனது.
இதன் காரணமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமத்தை பிசிசிஐ நிர்வாகம் 2012ல் ரத்து செய்தது. இதனை எதிர்த்து டெக்கான் அணி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை ஓய்வுபெற்ற நீதிபதி சி.கே.தக்கார் தலைமையிலான தனிநபர் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.
தற்போது இந்த தீர்ப்பாயம் இந்த வழக்கு குறித்து தீர்ப்பினை கூறியுள்ளது. அதில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தற்போதைய மதிப்பு ரூ.4,800 கோடியாக மதிப்பிடப்படுகிறது பிசிசிஐ நிர்வாகத்தின் முடிவு சட்ட விரோதமானது. ஆகவே டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ரூ.4,800 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.