பொடுகு தொல்லையா? எதனால்?எளிய வீட்டு வைத்தியம்!
நமது ஒவ்வொரு முடியின் அடியிலும் உள்ள ஆயில் சுரப்பிகள் சீபம் போன்ற எண்ணெய் பசையை சுரக்கும். இது இயல்பானது. அதேபோல் அந்த இடத்தில் மலசீசியா பர்பர் என்ற பூஞ்சைகள் இருக்கும். இதுவும் சாதாரணமானது. ஆனால் சில பேருக்கு சில காரணங்களால் இந்த பூஞ்சையானது அந்த சீபம் சுரக்கின்ற எண்ணெயை அதனுடைய உணவுக்காக சாப்பிட தொடங்கும். அதுமட்டுமில்லாமல் நமக்கு சாதாரணமாக முடி கொட்டும் பொழுது இறந்து போன தோல் செல்களும் சேர்ந்து உதிரும். தோல் செல்களையும் அந்தப் பூஞ்சைகள் உணவாக உட்கொள்ளும். தோல் செல்கள் பூஞ்சைகள் மற்றும் எண்ணெய் பசையுள்ள சீபம் ஆகிய மூன்றும் சேர்ந்தது தான் பொடுகு. இவை மூன்றும் சேர்ந்து வெள்ளை நிறத்தில் செதில் போன்று தோன்றுவது தான் பொடுகு.
இந்த பொடுகானது எல்லாருக்கும் உருவாகாது. சிலருக்கு மட்டுமே உருவாகும். இந்த பொடுகினால் தலையில் அரிப்பு உண்டாகும். வெள்ளையாய் செதில் செதிலாய் தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருக்கும். இதனால் ஆரம்பத்தில் முடி கொட்டாது. போகப்போக நிரந்தர முடி இழப்பை ஏற்படுத்தி விடும்.
அடுத்து பொடுகு உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தக் கூடாது. ஆனால் வேறு வழியில் பயன்படுத்தலாம் குளிப்பதற்கு முன்னால் தலையில் பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு அடுத்து தலைக்கு குளிக்கலாம். அடுத்து தலைக்கு குளிப்பது என்பது அவரவர்கள் செய்யும் வேலையை பொறுத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தலைக்கு குளிக்கலாம். தினமும் வெளியில் வேலை செய்பவர்கள் என்றால் தினமும் தலை குளிப்பது நல்லது. தலைக்கு குளிப்பது என்பது நமது வேலை, சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் நமது தலைமுடியின் அமைப்பை பொறுத்து மாறுபடும். அதிகம் வெளியில் சுற்றாமல் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் வறண்ட தலை முடி உடையவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் தலை குளித்தால் போதுமானது.
பொடுகை குறைப்பதற்கான இயற்கையான வழிமுறைகள்
1. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் + வினிகர் ஒரு ஸ்பூன் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலை குளிக்கலாம்.
2. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், தயிர் ரெண்டு ஸ்பூன், மற்றும் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன், இதை மூன்றையும் சேர்த்து ஹேர்பேக் போல் தலையில் தடவி 45 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.
3. துளசி இலைகளை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை நீங்கும்.
4. வேப்பிலைகளுடன் தயிர் சேர்த்து அரைத்து அதை தடவி வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.
5. வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலைக்கு தடவலாம்.
இதில் ஒரு முறையை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. ஐந்து முறைகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்.
இந்த முறைகளில் பொடுகு போகவில்லை எனில் மருத்துவரின் ஆலோசனையுடன் ஏதேனும் ஒரு பொடுகு ஷாம்பை உபயோகப்படுத்தலாம்.
பொடுகு தொந்தரவு உள்ளவர்கள் முட்டை, மீன், வெங்காயம், பூண்டு, தயிர், இட்லி மாவு புளிக்க வைக்க கூடிய பொருட்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு, வால்நட், ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பொடுகின் பாதிப்புகள் குறையும்.