பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு!
வாக்கெடுப்பில் வந்த முடிவினால் எலன் மஸ்க் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெஸ்லா மோட்டர்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மாஸ்க் கடந்த அக்டோபர்-27 ஆம் தேதி பிரபலமான சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கி கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார்.
அவர் டிவிட்டர் நிறுவனத்தின் உச்ச பொறுப்பில் ஏற்றத்தில் இருந்தே பல அதிரடி
நடவடிக்கையையும் செயல்பாட்டையும் மேற்கொண்டார். தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தின்
தலைமை அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளிகளின் புளு டிக்கிற்கு கட்டணம் என மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.
மேலும் 7500 ஊழியர்களில் சுமார் 4000 பேரை ட்விட்டரில் பணியில் இருந்து
நீக்கினார்.எலானின் இது போன்ற செயல்பாடுகளை நெட்டிசன்ஸ் ரசிக்கவில்லை. கடும்
அதிருப்தியை அடைந்தனர்.மேலும் அவரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் கடும்
விமர்சனங்களை எதிர்கொண்டார். அமெரிக்காவில் செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த
பத்திரிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக இந்நிறுவனத்தால் முடக்கப்பட்டது.
இந்த செயல்பாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோனியா குட்டர்ஸ் வரை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நடவடிக்கையை கைவிட்டார். அதன் பரபரப்பு
அடங்குவதற்குள் கொள்கை மாற்றம் செய்கிறேன் என கடும் சிக்கலில் மாட்டி தவிக்கிறார் மஸ்க்.இந்நிலையில் நேற்று எலான் மஸ்க் டிவிட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். அதில் டிவிட்டரில் தலைமை பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா? வேண்டாமா? என
பயனாளர்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.
அதில் 1 கோடியே 75 இலட்சத்து 2 ஆயிரத்து 391 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு நிறைவடைந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என 57.5 சதவீதம் பேரும் விலக வேண்டாம் என 42.5 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். மேலும் அந்த வாக்கெடுப்பின் டிவிட்டர் பதிவில் “ அந்த வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று பதிவிட்டு இருந்தார்.
தற்போது தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என அதிக வாக்குகள் பதிவாகி
உள்ளதால் அவர் பதவி விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற கொள்கை
சார்ந்த முடிவுகளுக்கு தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் ஏற்கனவே
கூறியிருந்தார். அதிரடிக்கு பெயர் பெற்றவரான எலான் பதவி விலகுவாரா? அல்லது வேறு
ஏதேனும் அதிரடியாக அறிவிப்பு வெளியிடுவாரா?? என உலகமே காத்துக்கொண்டு இருக்கிறது.