பலரும் தேநீர் அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஆனால் காபி அல்லது தேநீர் குடிப்பது ஆரோக்கியமற்றது என்று சில கூற்றுகளும் நிலவி வருகிறது. இப்போது பலரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காகவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காகவும் பலரும் க்ரீன் டீ குடித்து வருகின்றனர். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் காஃபின் அளவு குறைவாக உள்ளது. க்ரீன் டீ குடிப்பது புற்றுநோய், உடல் பருமன், இருதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்கினாலும் அதிக அளவு க்ரீன் டீ குடிப்பது சிலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
க்ரீன் டீ குடிப்பதால் அனைவருக்கும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடாது, ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக மார்பகப் புற்றுநோய், சில மரபணு மாறுபாடுகள் உள்ளவர்கள் க்ரீன் டீ அதிகம் குடித்தால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள UGT1A4 மரபணு வகை கொண்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், கிரீன் டீ சப்ளிமென்ட்டை உட்கொண்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கல்லீரலுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடிய நொதி கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகரித்தது கண்டறியப்பட்டுள்ளது.