என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?
மதுரையில் நடைபெறும் அஇஅதிமுக மாநில மாநாட்டிற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் வளையங்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மிகப் பிரம்மாண்டமான அரங்குகள்; விழா மேடைகள்; எல்.இ.டி திரைகள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களும் மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்கள், நிர்வாகிகள் பொதுமக்கள் என 5 இலட்சம் பேருக்கும் காலை, மாலை, இரவு என மூன்று நேரமும் உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினர் இருந்தாலும் மாநாடு அரங்கு, விழா மேடையை சுற்றியும் 1,500 தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த நிர்வாகிகளுக்கு என பிரத்கேய ஏற்பாடுகளும், அவர்கள் தங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு கழிவறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் மாநாட்டில் செய்யப்பட்டுள்ளன.
ஆக மொத்தமாக பல கோடி ரூபாய் இந்த மாநாட்டு பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இப்படி பல கோடி ரூபாய் செலவு செய்து மதுரையில் மாநாடு நடத்துவதற்கு காரணம், தென் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களை கவர்ந்து விடலாம். அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும் என அதிமுக தரப்பினர் நம்புவதாக தெரிகிறது.