`எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க மட்டும் இவ்வளவு வேகமா?’ – விஜய் அரசை சீண்டிய உதயநிதி; குறுவை நிதியை வைத்து கடும் தாக்கு!

எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், அதே வேகத்தை விவசாயிகளுக்கான குறுவை சிறப்புத் தொகுப்பை வழங்குவதிலும் காட்டியிருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தும் விவசாயிகளின் கைகளுக்கு நிதி சென்று சேரவில்லை என குற்றம்சாட்டியிருக்கும் அவர், எம்.எல்.ஏ-க்களுக்கான கார் விவகாரத்தையும் இதனுடன் ஒப்பிட்டு அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார்.

காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு மிகவும் முக்கியமானது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படாத நிலையில், குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஜூன் 12-ம் தேதியே குறுவை சிறப்புத் தொகுப்புக்கான அரசாணையை விஜய் அரசு வெளியிட்டிருந்தது.

இந்த சிறப்புத் தொகுப்பை பொறுத்தவரை, குறுவை சாகுபடி தொடங்கும் நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தால்தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறும். விதை, உரம் மற்றும் சாகுபடிக்கான ஆரம்பகட்ட செலவுகளை எதிர்கொள்ளும் நேரத்தில் அரசு உதவி கிடைக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் நடவு பணிகள் முடிந்து அடுத்தகட்ட விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், அறிவிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பு இன்னும் முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த விவகாரத்தை தற்போது நேரடியாக கையில் எடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அது இன்னும் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என தனது சமூக வலைதளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே சட்டப்பேரவையில் தான் வலியுறுத்தியிருந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக சட்டப்பேரவையில் வறட்சி நிவாரணம் தொடர்பாக தான் கேள்வி எழுப்பியபோது, குறுவை சிறப்புத் தொகுப்புக்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக முதலமைச்சர் விஜய் பதிலளித்ததையும் உதயநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார். நிதி ஒதுக்கப்பட்டதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் தெரிவித்த பிறகும் அந்தப் பணம் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பது ஏன் என்பதுதான் தற்போது உதயநிதி எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்வி.

அதோடு நிறுத்தாமல், விஜய் அரசை `Inefficient அரசு’ என குறிப்பிட்டு உதயநிதி கடுமையாக சாடியிருக்கிறார். குறுவை நிதி கிடைக்காதது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அதனை அரசு கவனிக்கவில்லையா அல்லது விவசாயிகளின் பிரச்சினையை வழக்கம்போல் அலட்சியம் செய்கிறதா என்ற ரீதியிலும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் அவரது பதிவில் அதிக அரசியல் கவனத்தை ஈர்த்திருப்பது விவசாயிகள் நிதியை எம்.எல்.ஏ-க்களுக்கான கார் திட்டத்துடன் ஒப்பிட்டிருப்பதுதான்.

சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி எம்.எல்.ஏ-க்களின் தனி உதவியாளர், ஓட்டுநருக்கான ஊதியம் மற்றும் எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றுக்காக மாதந்தோறும் கூடுதலாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அதனை செயல்படுத்துவதற்கான பணிகளும் வேகமெடுத்துள்ளன.

எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த வகையான கார் வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் பல்வேறு மாடல் கார்கள் தலைமைச் செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆறு வகையான கார் மாடல்களை ஆய்வு செய்து, Test Drive மேற்கொண்டு அதிலிருந்து பொருத்தமான வாகனத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களிலேயே கார் மாடல்களை தேர்வு செய்யும் அளவுக்கு அரசு நிர்வாகம் வேகமாக செயல்படுவதைத்தான் தற்போது உதயநிதி தனது விமர்சனத்திற்கான ஆயுதமாக மாற்றியிருக்கிறார்.

எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்குவதில் காட்டப்படும் வேகத்தை விவசாயிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதியை கொண்டு சேர்ப்பதிலும் அரசு காட்டியிருக்க வேண்டும் என்பதே உதயநிதியின் தாக்குதல். விவசாயிகளின் நலனில் அக்கறையில்லாமல் அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், குறுவை சிறப்புத் தொகுப்பை உடனடியாக பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதில் அரசியல் ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயமும் இருக்கிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் விஜய் அரசின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே எதிர்க்கட்சிகள் அதனை விமர்சனத்திற்கான வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு வசதிகளை அதிகரிக்கும் அதே நேரத்தில், பொதுமக்கள் தொடர்பான திட்டங்களில் தாமதம் ஏற்பட்டால் இரண்டையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சிகளுக்கு எளிதான அரசியல் ஆயுதமாக மாறும். தற்போது உதயநிதி அதையே குறுவை சிறப்புத் தொகுப்பு விவகாரத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக விஜய் அரசு தனது முதல் 100 நாள் செயல்பாடுகளை சாதனைகளாக முன்வைத்து வரும் நேரத்தில், அறிவிப்புக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறிவைப்பதுதான் திமுகவின் தற்போதைய அரசியல் Strategy-யாகவும் தெரிகிறது. ஒரு திட்டத்திற்கு எவ்வளவு நிதி அறிவிக்கப்பட்டது என்பதைவிட, அந்த நிதி பயனாளிகளிடம் எப்போது சென்றது என்ற கேள்வியை எதிர்க்கட்சி தொடர்ந்து எழுப்பினால், புதிய அரசுக்கு அது நிர்வாக ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் விஜய் அரசின் பதிலும் முக்கியமானதாக இருக்கிறது. குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதுவரை எத்தனை விவசாயிகள் பயனடைந்துள்ளனர், மீதமுள்ளவர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் போன்ற விவரங்களை அரசு வெளியிட்டால் உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியும். இல்லையென்றால், `எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க அவசரம்; விவசாயிகளுக்கு நிதி வழங்க தாமதம்’ என்ற எதிர்க்கட்சியின் விமர்சனம் அரசியல் ரீதியாக மேலும் வலுப்பெற வாய்ப்பிருக்கிறது.

மேட்டூர் அணை திறக்கப்படாதது தொடர்பாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் விஜய் – உதயநிதி இடையே விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது குறுவை நிதி விவகாரமும் அந்த மோதலின் அடுத்த பகுதியாக மாறியிருக்கிறது. ஆளும் தரப்பு தனது விவசாயத் திட்டங்களை முன்வைக்க, எதிர்க்கட்சி அவை களத்தில் எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கின்றன என்ற கணக்கை கேட்க ஆரம்பித்திருக்கிறது.

அதிலும் எம்.எல்.ஏ-க்களுக்கான கார் மாடல்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்த அதே நேரத்தில் குறுவை நிதி விவகாரத்தை உதயநிதி கையில் எடுத்திருப்பதால், அரசியல் ரீதியாக Timing-ம் அவருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

எம்.எல்.ஏ-க்களுக்கான கார் எந்த மாடல் என்பதை தேர்வு செய்வதில் அரசு காட்டும் வேகம் ஒருபக்கம் இருக்கட்டும்… ஜூன் மாதமே அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு எப்போது வரும் என்பதற்கான தேதியை விஜய் அரசு சொல்லுமா என்பதுதான் தற்போது உதயநிதி எழுப்பியிருக்கும் கேள்வி!