கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா?
உலக சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்றதாக கூறி முதலமைச்சரையும், அமைச்சரையும் மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாற்றுத்திறனாளி தடகள வீரர்களுக்கான பார ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது்.
அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும்.
அந்த வகையில், ஒரு மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் தான் உலக சக்கர நாற்காலி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி தனது சொந்த ஊர் மக்களையும் ,அமைச்சரையும் முதலமைச்சரையும் ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு, சக்கர நாற்காலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என அந்த பகுதி மக்களை நம்ப வைத்துள்ளார்.
வினோத் பாபு சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் வெளிமாநிலங்களுக்கு சென்று சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வினோத் பாபு அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் நடைபெற்ற சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாகவும் அந்த அணியின் கேப்டனாக தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனை தனது சொந்த ஊர் மக்களை நம்ப வைத்துள்ளார் ஊர் மக்களும் நம்ம ஊரை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளார் என்ற மகிழ்ச்சியில் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
இந்த விவகாரம் அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் காதுகளுக்கு சென்றது,உடனே அமைச்சரும் சொந்த தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரரான வினோத் பாபு அவர்களை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று வாழ்த்தும் பெற செய்தார்.
ஆனால் வினோத் அவர்கள் சர்க்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் இல்லை என்றும் அவர் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும் தலைமை செயலகத்திற்கு புகார் குவிந்ததாக கூறப்படுகிறது.
வினோத் பாபு அவர்கள் வெற்றி பெற்றதாக கூறி ஊர் மக்களிடமும் முதலமைச்சரிடம் காண்பித்த கோப்பை அது கடையில் வாங்கியது தான் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பிலும், அரசு தரப்பிலும் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.