காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து நாட்களுக்கு ஒருமுறை ஆந்திரா சென்று கார்த்திக்கை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. அவர் ஆந்திரா சென்று இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கருதினார்கள். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றமும் வீசியுள்ளது. அதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எனவே அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அமீனா பூட்டிய வீட்டுக்குள் கட்டிலில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் சொன்னார்கள். அமீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக் குறைவினால் இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.