ஒருவருக்கு சொந்த நிலம் இருக்கிறது என்றால் அந்த நிலம் தன்னுடையது தான் என நிரூபிக்க முக்கிய ஆவணமாக பட்டா பயன்படுகிறது. இந்த பட்டாவில் நிறத்தினுடைய உரிமையாளரின் பெயர் நிலத்தினுடைய அளவு நிலத்திற்கான பட்டா எண் என அனைத்து விவரங்களும் சரியானதாக அமைந்திருக்கும். இந்த பட்டா எண் பயன்படுத்தி நிலத்தினுடைய அனைத்து விவரங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். பட்டாக்களில் எத்தனை வகைகள் இருக்கிறது ? எந்தெந்த வகைக்கு என்னென்ன மாதிரியான அர்த்தங்கள் என தெரியுமா ?
பொதுவாக நிலத்தினுடைய உரிமையாளருக்கு வழங்கப்படக் கூடிய பட்டாவில் பல வகைகள் உள்ளன. அவை நிலங்கள் இருக்கக்கூடிய இடங்களை பொருத்தும் அந்த நிலத்தினுடைய தன்மையை பொருத்தும் மாறுபடுகிறது. பட்டாக்களின் உடைய வகைகளை கீழே காணலாம் :-
✓ TSLR பட்டா :-
இந்த பட்டாவானது நகர்புறங்களில் இருக்கக்கூடிய நிலங்களுக்கு ஏற்றவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பட்டா வகைகள் விவசாய நிலங்களுக்கான பட்டா வகைகளாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் TSLR பட்டா வகையானது நகர்ப்புறங்களில் இருக்கக்கூடியவர்களுக்கு துல்லியமான நில சர்வே மற்றும் எந்த வித பிரச்சனைகளும் இல்லாத வகையில் வழங்கப்படக் கூடிய பட்டாவாக பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பட்டா என்றால் அதில் 5 ஏக்கர் நிலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ கூட்டு பட்டா :-
அப்பாவுடைய சொத்து அல்லது தாதா உடைய சொத்து பிள்ளைகள் அல்லது பேரன்களுக்கு வரும் பொழுது ஒரு பட்டாவில் பலருடைய பெயர் இடம் பெற்றிருக்கும். அதில் யார் யாருக்கு எவ்வளவு நிலம் என்பது குறிப்பிடப்படாமல் பொதுவாக அந்த நிலத்திற்கான உரிமையாளர்கள் இவர்கள்தான் என பலருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அது கூட்டுப்பட்டாவாக கருதப்படுகிறது.
✓ தனிப் பட்டா :-
கூட்டு பட்டாவில் இருந்து உட்பிரிவு எண் பெற்று அதன் பின் நிலத்தில் தனக்கு இவ்வளவு உரிமை இருக்கிறது என அதனை அளந்து கூட்டு பட்டாவில் இருந்து பிரித்து நிலத்தின் உரிமையாளரான இவருக்கு உட்பிரிவு எண் வழங்கப்படுவதோடு அந்த நிலத்தில் இவருக்கு இவ்வளவு உரிமை இருக்கிறது என நிலத்தை அளந்து தனியாக வழங்கப் படக் கூடியது தனிப் பட்டா.
✓ நிபந்தனை பட்டா :-
அரசு தனியார் அல்லது சமூக ரீதியான குழுக்களுக்கு வழங்கக்கூடிய இலவச பட்டாக்கள் குறிப்பிட்ட கால வரையறை வைத்து நிபந்தனையோடு கொடுக்கப்படும் பட்சத்தில் அந்த காலம் முடிவடையும் வரை பட்டாவிற்கு உரிய இடத்தை அல்லது வீட்டை யாராலும் விற்க முடியாது இதற்கு பெயர்தான் நிபந்தனை பட்டா.
✓ TKT பட்டா :-
மலைவாழ் கிராமவாசிகளுக்காக அரசால் வழங்கப்படக்கூடிய டி கே டி பட்டா வகைகள், வேறு யாருக்காவது விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அந்த இடத்தை விவசாயத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்த முடியாது. குறிப்பாக ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் இது போன்ற பட்டாக்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு இருப்பதால் அங்கு நிலம் வாங்குபவர்கள் இதனை கவனித்து அதன் பின் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டி கே டி பட்டா கொண்ட நிலத்தை வணிகம் மற்றும் வர்த்தகத்திற்காக பயன்படுத்தும் பட்சத்தில் அதனை அரசுடைமை ஆக மாற்றி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.