ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 27ஆம் தேதி இதை செய்வது மிகவும் அவசியம்!
வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் நாள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, தமிழகம் முழுவதும் வருகிற 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. எனவே அன்றைய நாளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். குறிப்பாக, சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பாக நடைபெற உள்ளது.
அதன் காரணமாக, போலியோ சொட்டு மருந்து செலுத்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் போலியோ சொட்டு மருந்து மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது எனவும், சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுடன் ஒரு நபரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.