பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!!

0
217

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ‘பொருள்’-பள்ளி மாணவிகள் அசத்தல்!!

இந்த நவீன உலகம் பல புதுமைகளை கொண்டிருந்தாலும்,பெண்களின் பாதுகாப்பு மட்டும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்னும் அவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பது தான் உண்மை. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்ற சம்பவங்கள் பொறுத்தவரை
உலக தர வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்கொடுமை தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் வெறும் 3% நபர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. மீதமுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் பள்ளி மாணவிகள் பெண்களை பாதுகாத்து குற்றங்களை குறைக்கும் வகையில் கடிகாரம் ஒன்றினை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

விழுப்புரம், திரு.வி.க.சாலையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற நிவேதா,ராஜஸ்ரீ என்ற இரு மாணவிகள் பெண்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர்.

அதன்படி,பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாக தான் என்பதை உணர்ந்து
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க வேண்டுமென்பதற்காக கடிகாரம் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.இவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடந்த ஆண்டு தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 26000 புதிய கண்டுபிடிப்புகளில் வெறும் 10 மட்டுமே தேர்வானது.இதில் இவர்களின் கடிகாரமும் ஒன்றாகும்.மேலும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் இவர்களின் கண்டுபிடிப்பு தேர்வாகியுள்ளது.

மாணவிகள் கண்டுபிடித்துள்ள கடிகாரத்தின் சிறப்பு

மாணவிகள் வடிவமைத்த கடிகாரத்தில் குளோபல் புரொடக்ஷன் சிஸ்டம் (ஜி.பி.எஸ்.) மற்றும் சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கடிகாரத்தை கையில் அணிந்திருக்கும் பெண்கள் தங்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்று உணர்ந்தால் இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் போதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் சென்று விடும்.மேலும் இதில் அலாரம் அடிக்கும் வசதியும் உள்ளதால் அலாரம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காப்பற்ற முடியும்.

இதுகுறித்து பேசிய மாணவிகள்,தமிழக அரசு அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஊக்கமளித்து வருவதால் தாங்கள் அறிவியல் பூர்வமாக சிந்தித்து இந்த கடிகாரத்தை கண்டுபிடித்தோம்.
மேலும் அலைபேசி வசதி இல்லாத எங்கள் கிராமத்து பெண்களுக்கு இந்த கடிகாரம் பெரிதும் உதவும்.எங்களின் இந்த கண்டுபிடிப்புக்கு எங்கள் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் அறிவியல் ஆசிரியை ஜோசப்பின் ஆகியோர் உதவினர் என்று கூறினார்.

மேலும் இத்தனை சிறப்பு வாய்ந்த கடிகாரத்தை கண்டுபிடித்த மாணவிகளை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

Previous articleகுடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!
Next articleதொடர்ந்து மூன்று நாட்கள் மழைக்கால கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!! மாநிலங்களவை தலைவர் அதிரடி!!