கரோனா தடுப்பு பணிகளுக்காக ஆய்வு செய்யும்பொருட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி என பல மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதுடன், பல்வேறு
நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகளின் மூலமாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி உள்கட்சிக்குள் கருத்து மோதல்கள் இருந்து வந்தன. அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
இருந்தபோதும் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள் உள் கட்சிக்குள் கருத்து சர்ச்சைகளும் ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது.
இதுவரை மௌனமாக இருந்த ஓபிஎஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அனைத்து மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களிடையே வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி மறைமுக உத்தரவிட்டுள்ளதாகவும், தனது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தும் தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சசிகலா விடுதலையாகும் பட்சத்தில், அதற்குப் பிறகான அரசியல் மாற்றங்கள் குறித்து எப்படி இருக்கும் என்பதும், அதற்கான சூட்சம அரசியல் யுக்திகள் எப்படி இருக்கும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவடத்திற்கும் சென்று நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசியல் தொடர்பான களநிலவரங்களை ஆய்வு செய்வதற்கும் தற்போது இருந்தே தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டாதாக தெரிவிக்கின்றனர்.
முன்பு ஜெயலலிதா ஆட்சியில், தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே தேர்தலுக்கான பணிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பித்து விடுவார். மேலும் அனைத்துக் கட்சிகளுக்கும் முதலாவதாக வேட்பாளர் பட்டியல்களை வெளியிடுவதும் அவராகத்தான் இருப்பார்.
அந்த வகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் அதே பாணியை பின்பற்றி தற்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களிடம் அதிமுகவின் செல்வாக்கு எப்படி உள்ளது, மேலும் அந்தந்த மாவட்டத்தில் அரசியல் வியூகங்கள் எடுப்பதற்கான களநிலவர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.