எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா?

Photo of author

By Savitha

எய்ட்ஸ்சை விட கொடுமையான நோய்க்கு காரணம் இந்த மதுப்பழக்கமா?

கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல் தான். உடலில் மற்ற உறுப்புகளை விட இது கொஞ்சம் ஸ்பெஷல் தான். காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுக் கொள்ளும்.

கல்லீரல் முக்கால்வாசி பாதித்தாலும் தன் வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர் தான் இதன் பாதிப்பே வெளியில் தெரிய வரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.

மஞ்சள் காமாலை நோய்க்கான காரணம்:

கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் இருப்பதால் மஞ்சள் காமாலை வருகிறது. இதில் இரண்டு விதமான காமாலைகள் உள்ளன. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.

பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும்.

மஞ்சள் காமாலை நோய் வருவது எதனால்?

இவ்வாறு கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாமல் போவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலைக்கு ‘ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ்‘ என்று பெயர். மேலும் இவ்வாறு உருவாகும் மஞ்சள் காமாலையை ‘மெடிக்கல் ஜான்டிஸ்‘ என்றும் அழைக்கலாம். ‘ஹெப்படைட்டிஸ்‘ என்பது வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் உள்ளிட்ட காரணங்களால் வரலாம்.

மேலும் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள் அதனால் அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற நோய் பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டதால் கல்லீரல் பாதிப்படைந்த நபர்களுக்கும் இந்த வகையான காமாலை வரும். இவ்வாறு மஞ்சள் காமாலை வந்தவருக்கு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், மேலும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். இதனுடைய பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் உடல் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும்.

இந்த மஞ்சள் காமாலை நோய்க் குறித்து பெரும்பாலான மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு இந்த ‘ஹெப்படைட்டிஸ்‘ என்ற வைரஸ் கிருமித் தொற்றால் உருவாகக்கூடிய இந்த மஞ்சள் காமாலை நோயால் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து உயிரிழக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது எய்ட்ஸ் நோய்ப் பாதிப்பால் உயிரிழப்பவர்களை விட அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தங்களுக்கு இந்த நோயின் பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

அறிகுறிகள்:

மஞ்சள் காமாலை பாதிப்பு இருக்கும் பலர், அதை அறியாமல் வெறும் உடல் சூடுதான் என்று கவனிக்காமல் இருந்து விடுகிறார்கள். வெயிலால், உடல் சூட்டால் சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் ஒரு நாளில் சரியாகிவிடும். கண்கள் மஞ்சளாக மாறாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசோனிக் பரிசோதனைகளின் மூலமாக இதைக் கண்டறிய முடியும்.

இந்த ஹெப்படைட்டிஸ்-ஏ அல்லது இ என்ற வைரஸ் பாதிப்பால் உருவாகும் மஞ்சள் காமாலை ஒரு வாரத்தில் சரியாகிவிடும். சி – வைரஸ் பாதிப்பு என்றால் சரியாக குறைந்தது இதற்காக மூன்று மாதங்களாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் பாதிப்பு என்றால் ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் சிலர் இந்த நோய்ப் பாதிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் கூட சாப்பிட வேண்டிய சூழல் வரும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

இவ்வளவு கொடுமையான மஞ்சள் காமாலை நோயை சில அறிகுறிகள் மூலம் நாமே அறிந்து கொள்ளலாம். அதாவது குமட்டலுடன் வாந்தி, பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலது பக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறு வீக்கம், காய்ச்சல், ரத்தக் கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும். கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்.

மேலும் சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும் இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி அளவில் பெரிதாகும். இத்துடன் நிற்காமல் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நோய் வருவதற்கு முன்பே அது பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால், தற்காத்துக் கொள்ளலாம்.