நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது!

0
149

நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது!

கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை இறுதி செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை பெற்றுள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும், அந்த முறைகேடுகளை கண்டுபிடித்து அவற்றை நீக்கிவிட்டு பின்னர் தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

எனவே இதன் காரணமாகவே, இந்த முறை நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதை பயனாளிகள் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் பட்டியல் ஒட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 2021ஆம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous articleமீண்டும் அதிமுகவில் நுழைகிறார் சசிகலா? செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுந்த ஆதரவு குரல்கள்
Next articleஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!