ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!

0
55

ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், பா.ஜ.க 79 தொகுதிகளில் தனித்து களம் கண்டது,  ஜே.எம்.எம் 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே இரண்டு அணிகளுக்கும் இடையே இழுபறி நிலவியது.  ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது.

இதைத்தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார். ஏற்கனவே 2013ம் ஆண்டிலும் இதே கூட்டணியின் ஆதரவுடன் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்தார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க தோல்வியை சந்தித்ததுடன் ஆட்சியையும் பறிகொடுத்துள்ளது.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா ஜ க ஆட்சியை இழந்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை சந்தித்திருப்பது பா ஜ க வுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.