உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எம் எம் சுந்தரேஷுக்கு பிரிவு உபச்சார விழா!

Photo of author

By Sakthi

தான் நீதிபதியாகப் பதவி ஏற்ற கடந்த 12 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் மனசாட்சிக்கு விரோதமாக இப்போதும் தீர்ப்பளித்தது கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் தெரிவித்திருக்கின்றார் .உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு குடியரசுத் தலைவருக்கு நேற்று பரிந்துரை செய்தது அதில் சென்னை உயர்நீதிமன்றத்தை சார்ந்த மூத்த நீதிபதி எம்எம் சுந்தரேசும் ஒருவர்.

ஈரோட்டைச் சேர்ந்த இவர் கடந்த 1985ம் வருடம் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார் அதன்பின்னர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்சமயம் தன்னுடைய 59வது வயதில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு நேற்றையதினம் உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தலைமையில் பிரிவு உபச்சார விழா நடந்தது.இந்த விழாவில் உரையாற்றிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் 24 வருட காலமாக வழக்கறிஞராகவும், 12 ஆண்டு காலமாக நீதிபதியாகவும், நீதிபதி சுந்தரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கிறார். ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 563 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார் என்று உரையாற்றினார் சண்முகசுந்தரம்.

பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு உரையாற்றிய நீதிபதி சுந்தரேஷ் டெல்லி செல்வதை பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண் போலவும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்கு செல்லும் மாணவனை போலவும் நான் உணர்ந்து கொண்டு இருக்கின்றேன், பிரிவு என்பது எப்போதும் சிக்கலான ஒன்று ஆனாலும் வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும் என கூறியிருக்கிறார்.

ராமாயணத்தில் மன்னராக முடிசூட்டப்பட்ட சுக்ரீவனுக்கு எல்லோரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று ராமன் அறிவுரை வழங்கினார். அதேபோல எல்லோரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், நடத்த வேண்டும் சென்ற 12 வருட காலங்களில் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் மனசாட்சிக்கு விரோதமாக எப்போதும் தீர்ப்பு வழங்கியது இல்லை என்று மிக உருக்கமாக உரையாற்றி இருக்கிறார் நீதிபதி சுந்தரேஷ்.தொடர்ச்சியாக சென்னை உயர்நீதி மன்றம் சார்பாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நீதிபதி சுந்தரேஷ் கேடயம் மற்றும் நினைவு பரிசை வழங்கி கௌரவப் படுத்தினார்.

நீதிபதிகள் ஆர் சுப்பையா, பிரபாகரன் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சுந்தரேஷ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 என்ற சூழ்நிலையில், காலி இடங்கள் 19 ஆக அதிகரித்துள்ளது.