கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!
கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன.
இந்த கலவரத்தை முன்கூட்டியே கணித்து தடுக்காமல் விட்டது உளவுத்துறையின் தோல்வி என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது விசாரணையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் மாணவியின் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
இந்நிலையில் இப்போது உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காத்திருப்பு பிரிவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எஸ்.பி மற்றும் கலெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.