இனி இவர் இல்லாமல் இந்திய அணி இல்லை… கபில்தேவ் சொல்லும் அந்த வீரர் யார்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மிகப்பெரிய சாதனை இன்னிங்ஸை விளையாடி இந்தியாவை வெற்றிப் பெறவைத்தார்.
இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியைப் பற்றி இப்போது முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ள கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது.
அதில் “இந்திய அணியை இனி சூர்யகுமார் யாதவ் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நாம் இதை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போது அவரை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய அணி பற்றி பேசமுடியாது. கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற ஜாம்பவான்களுடன் சேர்ந்து இவர் அபாரமாக விளையாடினால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். இவரது இருப்பு எதிரணிக்கு அச்சத்தைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.
சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார். அவர் 40 ரன்கள் சராசரியில் 170 க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்து விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.