ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கூறியது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.
கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதையடுத்து இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் தனி நீதிபதி முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் அணிந்து செல்ல இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே எனக் கூறி, ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிஜாப் அணிவது தொடர்பான மனுக்களையும் தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.