கார் தீ பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழப்பு!! விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்!!
கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று காரில் தீப்பிடித்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு காருக்குள் வைத்திருந்ததே இதுவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என காவல்துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது
கேரள மாநிலம் கண்ணூர் குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயது ரிஷாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, கணவர் பிரஜித்தும் குடும்பத்தினரும் காரில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
மருத்துவமனை அருகே கார் செல்லும்போது திடீரென காரில் இருந்து தீ பரவி கொழுந்து விட்டு எரிந்த நிலையில் பிரஜித்தும் ரீஷாவும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
பின்பகுதியில் அமர்ந்திருந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். திடீரென காரில் தீப்பிடித்ததால் முன் பகுதியில் இருந்த இருவரும் வெளியேற முடியாத வகையில் உள்ளே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இருவரது உயிரிழப்புக்கு காரணம் என்ன என தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்ட நிலையில், கார் ஓட்டுனர் இருக்கையின் அருகே இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வைத்திருந்ததால் காரில் முன் பகுதியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ பெட்ரோல் பாட்டில்களில் பரவி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரஜித்தும் ரீஷாவும் தீயில் சிக்கி பலியானது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.