திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெயரை கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
இன்றைய தினம் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மசோதா தொடர்பாக உரையாற்றும்போது ஏழை, எளிய, மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த சட்டத்திற்கு நாங்கள் முழுமனதுடன் ஆதரவு தருகிறோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில், கலசபாக்கம் தொகுதி திராவிடர் கழக சட்டசபை உறுப்பினர் சரவணன் திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலசப்பாக்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் சரவணனின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றார். அதனடிப்படையில் திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெயர் கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

