தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் காலமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. மேலும், தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே.
தமிழக சட்டப்பேரவையில் 1957ஆம் ஆண்டு முதல் 2018 வரை எம்எல்ஏவாக இருந்தார். மேலும், கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் கருணாநிதியின் முழு உருவப்படம் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மேலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்க உள்ளதை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கருணாநிதி அவர்களின் முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, அம்பேத்கர், பெரியார் மற்றும் திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்பட 15 தலைவர்கள் படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் கருணாநிதி அவர்களின் முழு உருவப்படம் திறக்கப்பட உள்ளது என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக சட்டப்பேரவையில் இந்த 15 தலைவர்களுடன் 16ஆவது தலைவராக கருணாநிதி அவர்களின் புகைப்படமும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அவருடைய நினைவுகள் ஆனது எப்பொழுதும் மக்களுக்கு உள்ளேயே இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.