சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!!
சேலம் கால்நடை வளர்ச்சி சம்பந்தமான அடிக்கல்நாட்டு விழாவில், காவிரி டெல்டா விவசாய பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். விவசாயிகளும் நீண்ட நாட்களாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகோட்டை, அரியலூர், திருச்சி, கடலூர், கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடங்கிய விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மிக விரைவாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்றைய சட்டசபை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து நல்ல அறிவிப்பு வரும் என்று முதலவர் எடப்பாடி கூறியிருந்தார். அதுகுறித்த அமைச்சரவை கூட்டத்தை கூட்டி சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தனர். சொன்னதைப் போலவே இன்றைய சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்திற்காக சட்ட மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமை கொள்வதாகவும், இந்த நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூறுவதாகவும் பேசினார்.
சட்டமசோதாவின் முக்கிய அம்சங்கள்:
- முதல்வரை தலைமையாகக் கொண்டு 24 உறுப்பினர்களை கொண்ட அதிகாரக்குழு சிறப்பு வேளாண் மண்டலத்திற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும்.
- இந்த அதிகார குழுவில், துணை முதல்வர், வேளாண்துறை, சட்டத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல்துறை, தொழில்துறை போன்ற துறைகளின் அமைச்சர்களே அந்த அதிகாரக் குழுவின் முக்கிய உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
- இனி காவிரி டெல்டா பகுதிகளில்; இரும்பு ஆலை, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, அலுமினியல் உருக்காலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டம், மற்ற எரிவாயு திட்டம் மற்றும் பூமியை துளைத்தெடுக்கும், கனிமங்களை பிரித்தெடுக்கும் எந்த திட்டத்திற்கோ, ஆய்வுகளுக்கு அனுமதி கிடையாது.
சிறப்பு வேளாண்மண்டல சட்ட மசோதா அறிவிப்பால், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் மனதில் மகிழ்ச்சியை முதல்வர் எடப்பாடி ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.