தவறான தகவலை தெரிவிக்கிறார்கள்.. திகார் சிறை நிர்வாகம் மீது பரபரப்பு புகாரை கூறிய கெஜ்ரிவால்..!!
டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ஆம் தேதி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தவாறே தொடர்ந்து முதல்வராக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக இருப்பதால் நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன். ஆனால், திகார் சிறை நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற பொய்யான அறிக்கையை செய்தித்தாளில் படித்து வருத்தமடைந்தேன்.
அரசின் அழுத்தங்களால் திகார் சிறை நிர்வாகம் இதுபோன்ற தவறான அறிக்கைகளை வழங்கி வருகிறார்கள். எனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த அறிக்கை உண்மை அல்ல. என் உடல்நலப்பிரச்சனைகள் குறித்து எனது மருத்துவர்கள் அறிக்கை வழங்குவார்கள்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மெல்ல மெல்ல கொலை செய்வதற்கான சதி நடந்து வருவதாக கெஜ்ரிவாலின் மனைவியும், ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்களும் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். இப்படி உள்ள சூழலில் திகார் சிறை நிர்வாகம் குறித்து சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் புகார் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.