கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி
உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் இருக்கும் ரத்தமாதிரி சோதனை கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து சோதனையில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் விமானத்தின் மூலம் போபாலில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி பறவைக்காய்ச்சல் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இதனால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள கால்நடைத்துறை அமைச்சர் ரஜூ அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகள், கால்நடை பண்ணைகள், மீன் பண்ணைகள் போன்றவற்றின் சுகாதாரத்தையும் அங்கும் ஏதேனும் காய்ச்சல் பரவியுள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த பண்ணைகளை சுற்றி வாழும் பொது மக்களின் குடும்பத்தினருக்கும் ரத்த மாதிரி ஆய்வினை உடனடியாக செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இந்த பறவைக் காய்ச்சலால் கோழிக்கறியின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களின் ரத்த மாதிரி ஆய்வினை நடத்த தேனியில் தனியாக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.