கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி
தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்துமத கடவுளா? அல்லது மதச்சார்பற்றவரா? அவரது உடை காவியா? அல்லது வெள்ளையா? அவர் முனிவரா? அல்லது சாதாரண மனிதரா? என்பது குறித்த ஆராய்ச்சிகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர்
அரசியல்வாதிகள் பொது பணி செய்வதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வருவது உண்மையான திருவள்ளுவரின் பக்தர்களுக்கு பெரும் வருத்தமாக உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு பகுதியினர் திருவள்ளுவரை கடவுள் போல் வழிபட்டு வருவதாகவும் கேரளாவில் வள்ளுவரை இந்துக் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தமிழகத்தில் அவரை இந்துவாக கூட பார்க்கப்படுவதை குற்றம் சொல்வது ஏன்? என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது; தமிழுக்கு பெருமையாக இருக்கின்ற திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு கோவில் தான் (மைலாப்பூர்), ஆனால் கேரளாவில் மட்டும் திருவள்ளுவருக்கு 42 கோவில்கள் உள்ளன. கேரள மக்கள் அவரை இந்து கடவுளாக வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் அவரை இந்து என்றாலே மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுவது ஏன்? என்று பதிவு செய்துள்ளார்.
கேரளாவிலுள்ள முவட்டுப்புழா என்ற பகுதியில் உள்ள மக்கள் திருவள்ளுவருக்கு கோவில்கள் எழுப்பி தினமும் வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக மலையாள மாதத்தின் முதல் நாளும் திருக்குறளை பாடல் போல் பாடி வழிபட்டு வருகின்றனர். அவரை தங்களது குல தெய்வம் போல் இந்த பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கேரளாவில் மொத்தம் திருவள்ளுவருக்கு என 42 கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கூட திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் மட்டும் ஒரே ஒரு கோவில் தான் உள்ளது
கேரளாவில் உள்ள மக்கள் இந்துக் கடவுளாக திருவள்ளுவரையே பார்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அவரை இந்து என்று கூறினால் மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுவது ஏன் என்ற ஹெச்.ராஜாவின் கேள்விக்கு திராவிடக் கட்சியினர் என்ன பதில் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்