Kerala Recipe: வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் ரசம்!! ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!!
செரிமானத்திற்கு உகந்த ரசம். கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – 1 துண்டு
2)மிளகு – 1 தேக்கரண்டி
3)பூண்டு – 4 பல்
4)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
5)கறிவேப்பிலை – 1 கொத்து
6)சீரகம் – 1/2 தேக்கரண்டி
7)தக்காளி – 2(நறுக்கியது)
8)சின்ன வெங்காயம் – 10
9)உப்பு – தேவையான அளவு
10)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
11)பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு
13)கடுகு – 1/2 தேக்கரண்டி
14)வர மிளகாய் – 2
15)புளி – எலுமிச்சம் பழ அளவு
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சம் பழ அளவில் புளி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
அடுத்து சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி. தோல் நீக்கிய பூண்டு, சீரகம், சின்ன வெங்காயம், மிளகு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.
அடுத்து அதில் நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
அதன் பின்னர் ஊறவைத்த புளி கரைசலை அதில் ஊற்றவும். இதனை தொடர்ந்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு ரசத்தில் பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விடவும்.
இந்த ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.