உலகம் முழுவதும் குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரசால் இதுவரை 170 பேர் பலியாகி உள்ளதாகவும் 2000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதை அடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவின் தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.