கேரளா ஸ்டைல் மட்டன் பிரியாணி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!!
அனைவருக்கும் பிடித்த இறைச்சியான மட்டனில் பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த பிரியாணியை நெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து கேரளா ஸ்டைலில் செய்தால் மணம் அள்ளும்.
தேவையான பொருட்கள்:-
*மட்டன் – 1/2 கிலோ
*பாசுமதி அரிசி – 2 கப்
*நெய் – 100 கிராம்
*தயிர் – 100 மில்லி
*புதினா – 1 கைப்பிடி அளவு
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் எண்ணெய் – கால் கப்
*பிரியாணி இலை – 1
*ஏலக்காய் – 5
*இலவங்கம் – 5
*பட்டை – 1 துண்டு
*சீரகம் – 1 தேக்கரண்டி
*அன்னாசிப் பூ – 1
*கல்பாசி – 2
*பெரிய வெங்காயம் – 3
*இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 6
*முந்திரி – ஒரு கைப்பிடி அளவு
*உலர் திராட்சை – ஒரு கைப்பிடி
செய்முறை:-
ஒரு பாத்திரம் எடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன், 100 மில்லி தயிர், புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், அன்னாசி மொக்கு மற்றும் கல்பாசி சேர்த்து பொரிக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். அதனோடு பச்சை மிளகாய் வதக்கி கொள்ளவும்.
அடுத்து கலந்து வைத்துள்ள மட்டனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கி குக்கரை மூடி 8 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து விடவும். விசில் முழுவதும் நின்றபின் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 100 மில்லி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் காய்ந்து வந்ததும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை தயாராகி கொண்டிருக்கும் பிரியாணியில் சேர்த்துக் கொள்ளவும். பிரியாணி வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து 2 நிமிடம் வரை விட்டு பின்னர் குக்கரில் உள்ள சாதத்தை கிளறி விடவும். இவ்வாறு செய்தால் மட்டன் பிரியாணி சுவையாக இருக்கும்.