போலீஸ் வாகனத்தை எடுத்துச்சென்று வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த கும்பல்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள வொர்க் ஷாப்பில் பழுதுபார்க்க விட்டிருந்த போலீஸ் வாகனத்தை மூன்றுபேர் கொண்ட கும்பல் எடுத்துச்சென்று கருங்கல் பகுதியில் போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கருங்கல் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலையத்தில் உள்ள போலீஸ் வாகனம் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து அதை சரிசெய்ய வேண்டி மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வொர்க் ஷாப் ஒன்றில் வேலைக்கு விட்டுள்ளனர்.
இந்த வாகனத்தை மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்த போஸ்கோ டைசிங் 38, ரூபன் 27, ஹிட்லர் 40 ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை ஓட்டி பார்ப்பதாக கூறி வெளியே எடுத்து சென்று கருங்கல் பகுதிக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அந்த வாகனத்தை கருங்கல் பேருந்து நிலையத்தின் முன் நிறுத்தி வைத்துகொண்டு அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதாக கூறி பணம் பறித்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஸ்வின் என்ற வாலிபரை தடுத்து நிறுத்தி தங்களை க்ரைம் பிராஞ்ச் போலீசார் எனக்கூறி ஹெல்மெட் ஏன் போடவில்லை எனக்கேட்டு இருநூறு ரூபாய் பணத்தை அபராதம் என்று கூறி வாங்கிவிட்டு அவரது பாக்கெட்டில் இருந்து 2000 ருபாய் பணத்தையும் பிடிங்கிவிட்டு விரட்டி உள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அஸ்வின் அந்த வாகனத்தை போட்டோ எடுத்து உள்ளார் உடனே சுதாரித்துக் கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து வாகனத்தை எடுத்துகொண்டு தப்பி ஓடி உள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அஸ்வின் கருங்கல் போலீசில் இது சம்பந்தமாக புகார் அளித்தார்.
அதன்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வொர்க் ஷாப்பிற்கு சென்று விசாரணை நடத்திய போது அஸ்வின் புகாரில் கூறிய எண் கொண்ட போலீஸ் வாகனம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அங்கு பணிபுரியும் வேலையாட்களின் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்து சென்ற நபர்கள் போஸ்கோ டைசிங், ரூபன், ஹிட்லர் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மூன்று பேரையும் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்து கருங்கல் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.