அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!

Photo of author

By Vinoth

அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

இரு அணிகளும் இந்த போட்டியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக வான வேடிக்கைக் காட்ட கிட்டத்தட்ட 450 ரன்கள் அடிக்கப்பட்டன. இந்திய அணி சார்பாக கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இந்த போட்டியில் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் சேர்த்திருந்த கோலி, 20 ஆவது ஓவரில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஓவர் முழுவதும் தினேஷ் கார்த்திக்தான் பேட் செய்தார். அந்த ஓவரில் சில டாட் பால்களை வைத்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களோடு சேர்த்து 16 ரன்கள் சேர்த்தார். இதனால் கோலிக்கு ஸ்ட்ரைக்கே கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த ஓவரில் இடையே தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடிக்கவா எனக் கோலியிடம் கேட்க, அவரோ வேண்டாம், அதிரடியாக அடித்து ஆடு என சைகை செய்தார். இந்த தருணம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதை சமூகவலைதளங்களில் பரப்பி வரும் ரசிகர்கள் கோலியை பாராட்டி வருகின்றனர்.

இதே போட்டியில் அதிரடியாக விளையாடி கடைசி வரை தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்காக போராடிய டேவிட் மில்லரின் இன்னிங்ஸும் கவனம் பெற்றுள்ளது. அவர் 47 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.