சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து! 2 பேர் பலி

Photo of author

By Anand

Tamil

குளித்தலை அருகே கன்னிமார் பாளையம் பிரிவு சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மரம் வெட்டும் கூலி தொழிலாளி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டி மகன் வடிவேல் (39), வையாபுரி மகன் சின்னதுரை (35). இவர்கள் இருவரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் இன்று காவல்காரன்பட்டி பகுதிக்கு மரம் வெட்டும் வேலைக்காக இன்று தனது பைக்கில் இருவரும் பாளையம் – தோகைமலை மெயின் ரோடு கன்னிமார் பாளையம் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது எதிர் திசையில் நெய்வேலியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், கரிகாலி சிமெண்ட் தொழிற்சாலைக்கு நிலக்கரி ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியதில் கூலி தொழிலாளிகள் வடிவேல், சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன கூலி தொழிலாளர்களின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.