நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படி பேசமாட்டாங்க! அதை ரசிக்கவும் மாட்டங்க…. திமுகவினரை வெளுத்தெடுத்த குஷ்பு!
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படுகிறதோ இல்லையோ பாஜக படு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக பதவி வகிக்கும் அண்ணாமலை தினம் பத்திரிக்கையாளர் பேட்டி,ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டி காட்டுதல் என ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இது ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது.
அந்த வகையில் பாஜக மற்றும் திமுக என இரு கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.அதில் சமீபத்தில் அண்ணாமலை மற்றும் திமுகவின் அமைச்சர் செந்தில்பாலாஜி என இருவருக்குமிடையே நடந்த கார சார விவாதம் எல்லை தாண்டிய விமர்சனத்தை உருவாக்கியது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளரும், சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளருமான சைதை சாதிக் கலந்து கொண்டார். அப்போது அங்கு பேசிய அவர் ‘தமிழக பா.ஜ.க. பிரமுகர்களும், தமிழ் திரைப்பட நடிகைகளுமான குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஒருமையிலும், அவதூறாகவும்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய அவருடைய இந்த பேச்சு அடங்கிய விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், அரசியல் கட்சியினரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து நடிகை குஷ்பு இதற்கு வேதனை தெரிவித்து ட்வீட் போட்டு திமுக எம்பி கனிமொழியை டேக் செய்திருந்தார். இதை கவனித்த கனிமொழியும் அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் சைதை சாதிக்கை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் நதியா சீனிவாசன், கோமதி கணேசன் உள்ளிட்டோர் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில், கடந்த 29 ஆம் தேதி அன்று புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக மகளிர் படையுடன் அனுமதியின்றி போராட்டத்தில் நடத்தினார்.
இந்நிலையில், இந்த புகார் குறித்து முறையாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க சைபர் குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார், சைதை சாதிக் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த விவகாரம் சூடு பிடிக்க தற்போது தம்மை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது, டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு நேரில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.
அதன் பின்னர், அங்கு நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும் பெண்களை இவ்வாறு தவறாக பேசமாட்டார்கள். அப்படி பெண்கள் குறித்து தவறாக பேசும்போது யாரும் இப்படி ரசிக்க மாட்டார்கள். என்னை தவறாக பேசிய திமுக நிர்வாகி மீது ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.