வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக! கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்!

Photo of author

By Sakthi

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்கள் அதன் காரணமாக, வெற்றி பெற்றார்கள் என்று தெரிவிக்கும் அளவிற்கு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக எல்லா வன்னியர் சமூக மக்களும் பணி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். வன்னியர்களின் வெகு கால கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக நிறைவேற்றி இருக்கின்ற நிலையில், மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

வன்னியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மிக நீண்ட கால கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியும்,வன்னியர் இனத்தைச் சார்ந்த மக்களும் வைத்து வந்தார்கள். இது குறித்து அந்தச் சமூக அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில்,அதிமுக கூட்டணியில் இருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியும் வெகு காலமாகவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்திருக்கின்றது. இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் இன மக்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு மூன்றாக பிரிக்கப்பட்டு உள் ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது என்பதே இதனுடைய அர்த்தம். மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் இருக்கின்ற வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சீர்மரபினர் 7 சதவீத உள் ஒதுக்கீடு, மீதம் இருக்கின்ற பிரிவினை சேர்ந்தவர்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடும் பங்கீட்டு வழங்கப்பட்டிருக்கிறது .அதேபோல சுமார் ஆறு மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அதன் பிறகு இந்த இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்த அறிவிப்பிற்கு வன்னியர் இனத்தைச் சார்ந்த அனைத்து மக்களும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெகுகாலமாக போராட்டம் நடத்தி வந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள். ஆகவே நேற்று இந்த சட்டமானது சட்டசபையில் முன்வடிவு பெற்றவுடன் அந்த செய்தியானது மருத்துவர் ராமதாஸுக்கு அனுப்பப்பட்டது. அதனை கேட்ட அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இதுதொடர்பாக தெரிவித்திருக்கின்ற மருத்துவர் ராமதாஸ் 40 வருட கால கனவு நிறைவேறி இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தற்சமயம் நான் ஆனந்த கண்ணீரில் நனைந்து வருகிறேன் என்றும், வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து சட்டமுன்வடிவு கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிக்க நன்றி என்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றியினை தெரிவித்து இருக்கிறார் அதேபோல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகின்றார்.

இந்த அறிவிப்பு வந்தவுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய தந்தையான மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் தொலைபேசியில் கண்ணீருடன் உரையாடுவது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த அறிவிப்பை கண்டு மனமகிழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி சந்திக்க இருக்கிறது.

அதிமுகவின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. ஒரே சமயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற விதத்தில், இட ஒதுக்கீடு மசோதா, அதோடு தொகுதி பங்கீடு ஆகியவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி தனக்கு சாதகமான முடிவு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அதன் வெளிப்பாடாகவே அவர் வன்னிய இன மக்களுக்கு ஒரு வேண்டுகோள் இல்லை கட்டளை என்ற விதத்தில் தன்னுடைய வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்கள் அதன் காரணமாகவே மறுபடியும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று தெரிவிக்கும் விதமாக ,சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த வன்னியர் இனமும் செய்யவேண்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கின்றார்.