பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம்
நியூசிலாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றின் அருகே தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் என்ற சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானத்தின் மிக அருகிலும் சுற்றிலும் தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியது.
அதிர்ஷ்டவசமாக இந்த மின்னல்களால் விமானத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் பயணிகள் நூலிழையில் தப்பித்தனர். இந்த மின்னல்களை விமான நிலைய ஊழியர் ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
தொடர்ந்து மின்னல்கள் மற்றும் இடி இடித்து கொண்டிருந்ததால் இந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அதில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் தங்க விமான நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் நிலைமை சீரானவுடன் பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.