உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்!
கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய வீரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்த காய்ச்சக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் வயது 26. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கவேல் இறந்து விட்டதால் தாய் மற்றும் சகோதரியுடன் மாணிக்கம் வசித்து வந்துள்ளார். கபடி வீரரான இவர் , கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இவர் அந்த பகுதிகளில் நடக்கும் கபடி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கோப்பைகள் மற்றும் வெகுமதிகள் நிறைய பெற்றுள்ளார். இதையடுத்து கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்துள்ள கணக்கப்பிள்ளையூா் பகுதியில் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கபடி போட்டியில் தனது ஊரைச் சோ்ந்த இளைஞா்களுடன் மாணிக்கமும் பங்கேற்று விளையாடினாா்.
முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்ற இவரது அணி மூன்றாவது சுற்றுக்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென இரவு 11 மணி அளவில் மாணிக்கம் திடீரென தனக்கு அதிகமாக நெஞ்சு வலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் உடனடியாக அவர் அருகிலுள்ள அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குளித்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணிக்கம் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை பிரேத பரிசோதனை நடைபெற்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போட்டி தடை செய்யப்பட்டு விழாவிற்காக வைத்திருந்த மொத்த பரிசு தொகையான ரூ 20 ஆயிரத்தை விழா குழுவினர் மாணிக்கத்தின் தாயாரிடம் வழங்கினர்.
கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய இளம் வீரர் திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.