ஊரடங்கு நாட்டிற்கு தான், இவர்கள் காதலுக்கு இல்லை – செக்போஸ்ட்டில் நடந்த திடீர் திருமணம்

0
131

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தொழிலாளர்கள், அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து கவலையடைந்தனர்.அதே நேரத்தில் காதலர்களோ எப்பொழுது ஊரடங்கு முடியும் காதலியை சந்திக்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் காத்திருத்தலை தாண்டி கொரோனாவை சற்றும் பொருட்படுத்தாமல் காதலில் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக காதலனும் கேரளா காதலியும்.

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரத்தினம் செல்வராணி இவர்களின் மகன் பிரதீப். இவர் கேரளாவின் கோட்டயத்தில் பணியாற்றி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காயத்ரி என்ற பெண்ணை காதலித்து சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் காதலித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெற்றவர்களால் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார் பிரதீப்.

ஊரடங்கு முடிந்து கேரளாவிற்கு சென்று விடலாம் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தனது காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார் பிரதீப். இந்நிலையில் பிரதீப்பும் காயத்திரியும் கைப்பேசி மூலமாக தங்கள் தவிப்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இருக்கும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து பிரதீப், திருமணத்திற்காக கேரளா செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தபோது பிரதீப்பிற்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.

மேலும் தமிழக எல்லைப் பகுதியான குமுளி சோதனைச் சாவடி வரை சென்று அங்கிருந்த கேரள அதிகாரிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறி முறையிட்டும் அவர்கள் கேரளாவிற்குள் செல்ல அனுமதி தரவில்லை. இந்நிலையில் வேறு வழியில்லாமல் காயத்ரிக்கு அழைப்பு விடுத்து உடனடியாக தமிழக – கேரள சோதனைச் சாவடிக்கு வரும்படி தெரிவித்தார்.

தனக்காக காத்திருக்கும் காதலனுக்காக காயத்ரி மணப்பெண்ணா தன்னை அலங்கரித்து குமுளி சோதனைச் சாவடிக்கு வந்தார். இருவரும் சோதனைச்சாவடி அருகிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். இவர்களின் உண்மை காதலை புரிந்து கொண்ட அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த சிறிய மாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து மணமகனின் பெற்றோர் உட்பட சிலரை மட்டும் அழைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணம் முடித்து வைத்தனர்.

பிறகு மணமக்களை ஆசீர்வதித்து மணமகளை கேரளாவிற்கும், மணமகனை தமிழகத்திற்கும் அனுப்பி வைத்தனர். கொரோனா என்கிற வில்லனை மீறி காதலர்கள் வெற்றிப்பெற்ற செய்தி, ஊரடங்கினால் நேரில் சந்திக்கமுடியாமல் தவிக்கும் உண்மை காதலர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

Previous articleஇந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?
Next articleஇந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்! திருமாவளவன் கைதா? ஹச் ராஜா பரபரப்பு தகவல்