ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை!
ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழி நம் நாட்டில் பேசப்டுவது உண்டு, ஆனால் நம் மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி சேர்த்து வைத்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என்ற அதிக ஆசையினால் முன்பின் நம்பிக்கை இல்லாத நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பின்னர் நஷ்டம் அடைந்து உயிரை மாய்த்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த மோகன் பாபு இவர் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்து வரும் தொழிலை நடத்தி வருகிறார். கடந்த சில வருடமாக தொழிலில் நஷ்டம் ஏற்படவே தனது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வட்டிக்கு பணம் வாங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பதினோராம் தேதி சேலத்திற்கு தனது மனைவியுடன் வந்து புதிய பேருந்து நிலையம் பள்ளப்பட்டி சினிமா நகர் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் அறை திறக்கப்படாமல் உள்ளதை கண்ட ஊழியர்கள் இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதனையடுத்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.