கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மேட் இன் இந்தியா என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவற்றை அதிகரிப்பது மற்றும் வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது, உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த மேட் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக அவர் முதன்முதலில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டது முதல் கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். இது இந்திய அரசியல்வாதிகள் இடையே பேசுபொருளாக மாறினாலும் உலக அளவில் அவருடைய செல்வாக்கை வேறொரு பகுதிக்கு கொண்டு சென்றிருந்தது.
அப்படி செய்த வெளிநாட்டு பயணங்களின் ஒரு கட்டமாக தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதால் இந்தியா முழுவதும் பல மாற்றங்களை சந்தித்தது.இந்தநிலையில், போயிங் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு சேலத்தைச் சார்ந்த ஏரோஸ்பேஸ் என்ற எம் எஸ் எம் இ நிறுவனத்துடன் நேற்றையதினம் ஒப்பந்தம் போடப்பட்டது.
உலகில் எங்கெங்கிலும் மேட் இன் இந்தியா என்பதைப்போல மேட் இன் தமிழ்நாடு என்ற குரல் எழும்ப வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 22ஆம் தேதி நடந்த ஏற்றுமதி மாநாட்டில் கூறினார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உதிரிபாகங்களை தயார் செய்து அனுப்புவதற்கு சேலத்தைச் சார்ந்த நிறுவனத்துடன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் சேலத்தில் செயல்பட்டுவரும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரைவேட் நிறுவனம் உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளான முக்கிய விமான பாகங்கள் போன்றவற்றை தயார் செய்து வழங்க ஒரு நெடுங்கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு அதோடு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்பு காண சான்றாக விளங்குகிறது. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என சொல்லப்படுகிறது. இது சேலம், ஓசூர் போன்ற தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் இருக்கின்ற வளர்ந்துவரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு புதிய புத்துணர்ச்சியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் நிறுவனம் ஓசூரில் ரூபாய் 150 கோடி முதலீட்டில் இதில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியை எதிர்வரும் 24 மாதங்களில் அதாவது இரண்டு வருடங்களில் ஏற்படுத்த இருக்கிறது. அதோடு தற்சமயம் சேலத்தில் இருக்கின்ற உற்பத்தி கூடத்தை ஐம்பதாயிரம் தூர அடி பரப்பில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலமாக ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும், இது தமிழகத்தின் முதலமைச்சர் உடைய தொலைநோக்குப் பார்வை ஆன தமிழ்நாட்டின் தயாரிக்கப்பட்டது மேட் இன் தமிழ்நாடு என்பதன் ஒரு பணியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம் தெரிவிக்கும்போது கடந்த 33 வருடங்களாக தமிழ்நாட்டில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் தொழிலை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம், அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் பல வருடங்களாக ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறோம்.
போயிங் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு துணை நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வருகின்றோம், தற்சமயம் இதற்கான நேரடி ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் பணி மிக விரைவில் ஆரம்பிக்கப்படும், அடுத்த வருடம் முடிவதற்குள் இந்த செயல்பாடு தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.