தஞ்சை தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தஞ்சையை சேர்ந்த ஜஸ்டின், ஆல்ட்ரின் பிரபு, திவாகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்ய கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ” தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 2 லட்சத்து 56 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான சிலை காணாமல் போனது தொடர்பாக, கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காணாமல் போன தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதோடு வழக்கு விசாரணையின் போது அது எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.